கவிவேந்தர் கா.வேழவேந்தன்

பிறந்த நாள் : 05.05.1936. பிறந்த மண் : காரணி. இந்த இனிய சிற்றூர், அன்றைய தொண்டை வள நாட்டின் செங்கை மாவட்டத்திற்கு உரியது: இன்றைய கும்மிடிப்பூண்டி வட்டத்து ஆரணி ஆற்றங்கனரயில் அமைந்தது.

உயர் கல்விக்கு ஊரில் வழி இல்லாததால், இவர் சென்னைக்கு வந்து பயின்றார் வழக்கறிஞரானார். மாணவப் பருவத்திலேயே அறிஞர் அண்ணாவின் ‘திராவிட நாடு’, கலைஞரின் ‘முரசொலி’ – ‘முத்தாரம்’ பாவேந்தரின் ‘குயில்’, உவமைக்கவிஞர் சுரதாவின் ‘காவியம்’ – ‘இலக்கியம்’ முதலிய ஏடுகளில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதிப் புகழ் பெற்றவர். தொடர்ந்து, தரமான தமிழிலக்கிய இதழ்களில் எழுதிக் கொண்டிருப்பவர்

கவிஞர் தாகூர் நூற்றண்டு விழாவையொட்டித் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதல் பரிசாகத் தங்கப்பதக்கம் வென்றவர்.

‘வேழவேந்தன் கவிதைகள்’ நூலை, படிக்கும் பருவத்திலேயே அறிஞர் அண்ணா அவர்கள் தலைநகரில் வெளியிட்டுப் பாராட்யிருக்கிறார்.

மிகப்பலரும் மரபை மறந்த நிலையில் – பாவேந்தரின் கருத்து மணமும், சுரதாவின் உவமையழகும் மிளிர இயல்பாகப் பாடுவதில் இணையற்றுத் திகழும் வேழவேந்தன் உரைநடையிலும் வல்லவர். இதற்கு, இவருடைய கதை நூல்களும், கட்டுரை நூல்களும் சான்று சொல்லும். பல பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ள கவிவேந்தர், பத்துக்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர்.

தமிழ் மொழிக்காகவும், இனத்திற்காகவும் பல முறை சிறை சென்றவர்.

32 ஆண்டுக்கு முன், அறிஞர் அண்ணாவின் ஆணையை ஏற்று அந்தமான்-நிக்கோபார் தீவுகளிக்குச்சென்று, வேலை நீக்கம் செய்யப்பட்ட தமிழ்த் தொழிலாளர் சமுதாயத்திற்காக வழக்கு மன்றத்தில் வாதாடி அவர்களுக்கு மறுவாழ்வு ஈட்டித் தந்தவர். இவர் பெயரில், அத்தீவுகளில் இன்றும் நற்பணி மன்றங்கள் இயங்குகின்றன.

கும்மிடிப்பூண்டித் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். கலைஞர் அமைச்சரவையில் தொழிலாளர் நல அமைச்சராகப் பொறுப்பேற்று, புகழ்ப் பணி புரிந்தவர். ஜெனிவாவில் நடந்த உலகத் தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்புற்றவர்.

‘தமிழ்த்தேன்’ எனும் தமிழியக்க உணர்வூட்டும் தனித்தமிழ் ஏட்டை நடத்தி இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தவர்.

‘வண்ணத் தோகை’ எனும் கவிதைக் தொகுதிக்காக, தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர். தமிழக அரசின் ‘பாவேந்தர் விருது’ பெற்றவர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு தமிழ்ப் பாட நூல்களில் இவருடைய பாடல்கள் இடம் பெற்றுப் புகழ்மணம் வீசுகின்றன.

பாவேந்தர், முத்தமிழறிஞர், கவியரசர், உவமைக்கவிஞர் ஆகியோரின் தலைமையில் கவியரங்கேறியதுடன் தாமே நாடுமுழுதும் கவியரங்கத் தலைமை ஏற்றுக் கவிதை இலக்கியம் தழைத்திடச் செய்பவர்.

‘அனல் மூச்சு’ எனும் கவிதை நூலுக்காக முதற்பரிசு ‘தினத்தந்தி’யின் ஒரு இலட்சம் ரூபாயும் விருதும் பெற்றவர். இலண்டன் சுடரொளிக்கழகம் நடத்திய உலகத் தமிழ் கவிதை போட்டியில் முதற்பரிசும் விருதும் பெற்றவர்.

கவிஞர் கா.வேழவேந்தரை பற்றி ஆய்வு செய்து, ஆய்வுநூல்கள் வெளிவந்தள்ளன,

கா.வேழவேந்தன் படைப்புலகம்
மதுரை காமராசர் பல்கலைக்கழக முனைவர் பி.எச்.டி., பட்டத்திற்காக ஆய்வாளர்,

அ.சு.வாசுகி எம்.ஏ., எம்.ஃபில்., எம்.எட்., பகுதிநேர ஆய்வாளர்,

நெறியாளர்

முனைவர் ஜி .டி.நிர்மலா, எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்.டி., நிர்மலா மோகன்

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை தமிழ் உயராய்வு மையம், செந்தமிழ்கல்லூரி, மதுரை-625 001 நவம்பர்-2008.